கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் வழக்கறிஞரான மைக்கேல் பாரதி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் பாரதி தனது ஜூனியர் வக்கீல் மோனிகா(25) என்பவருடன் வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்திற்கு நேற்று காரில் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் மீண்டும் சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அசோக் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஜெ.மெட்டூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோனிகா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மைக்கேல் பாரதி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோனிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.