ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டியிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் விசைப்படகு மூலம் பிடித்து வரப்படும் மீன்களை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். வழக்கம் போல இந்த ஆம்னி பேருந்து தொண்டியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் இரண்டு பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீமிசல் பகுதியில் இருந்து 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து புறப்பட்டது. பின்னர் ஜெகதாப்பட்டினம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விஜயகுமார், நஜிபுன்னிசா(50), அகமது(10), அருள் ப்ரீத்தி(26), ஜேம்ஸ் பாலன் (30) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பேருந்தில் அதிக பயணிகள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் ஏற்படவில்லை. பின்னர் விபத்துக்குள்ளான பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.