கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரி நடுரோட்டில் விழுந்து கிடந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஓடியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டீசல் டேங்க் மற்றும் டீசல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இரண்டு கிரேன்களை வரவழைத்து 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரியை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.