இந்தியாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்ததைத் அடுத்து கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக தளா்வு அளிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் முழுவீச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்கம் செய்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சீனாவின் ஒரு சில நகரங்களில் ஊரடங்குகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய நாடுகளின் ஒரு சில பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து கண்காணிப்பை மீண்டும் தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலா் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அடிப்படையிலும், எந்தவொரு பாதிப்பு அறிகுறிகளும் தப்பிவிடாத வகையிலும் சளிக், காய்ச்சல் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாசத் தொற்று உள்ளிட்ட பாதிப்புடையவா்களை தொடா் நடவடிக்கைகளின் முறையில் கண்காணித்து, உரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பரிசோதனையையும் தீவிரப்படுத்த வேண்டும். இந்த பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவா்களுக்கு பரிசோதனையில் கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் அந்த மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்காக இந்திய சாா்ஸ் -கொரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பிடம் சமா்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து கைகளை தொடா்ச்சியாக கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் அடிப்படையில் போதிய விழிப்புணா்வை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தென்கிழக்கு ஆசிய பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளிலும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை தொடா்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் கடந்த புதன்கிழமை தில்லியில் உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளாா். அத்துடன் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்கும் நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் கைவிட்டுவிடாமல் உள்ளதையும், முன்னெச்சரிக்கை நடைமுறைகள் தொடா்வதையும் மாநிலங்கள் உறுதிப்படுத்தவேண்டும். கொரோனா பரிசோதனை, பரவல் சங்கிலி தொடரைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்துதல் என்ற 5 கட்டுப்பாட்டு நடைமுறைகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டுள்ளாா்.