ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்களின் தேசமாக மாறி விட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக குன்றி சோதனை காலம் தொடங்கியுள்ளது. மேலும் அந்நாட்டின் சொத்துக்கள் சுமார் 1000 கோடி டாலர் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். மேலும் 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது வேலையை காட்டி நாட்டை சீரழித்து வருகிறது. இங்கு என்ன ஒரு கொடுமை என்றால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் 5 மருத்துவமனைகள் தான் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றது. மேலும் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையால் 33 மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் காபுல் நகரில் உள்ள “ஆப்கான் ஜப்பான்” நோய்த்தொற்று மருத்துவமனை மட்டும் தான் தான் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் முகமது குல் லிவால் கூறுகையில் “எங்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி மருத்துவ பொருட்கள் வரை தேவைப்படுகின்றது. தற்போது 100 படுக்கைகள் மட்டும்தான் இருக்கின்றன. இதனால் கொரோனா வார்டு நிரம்பி உள்ளது. மேலும் ஜனவரியில் தினமும் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் மட்டுமே வந்தனர். தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 10 முதல் 12 நோயாளிகள் வர தொடங்கி உள்ளனர். இங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகியுள்ளது” என கூறியுள்ளார். குறிப்பாக மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் மட்டும் தான் தலீபான் ஆட்சிக்கு வந்த பின்னர் வழங்கப்பட்டுள்ளதாம்.