கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வரும் சென்னை மாநகராட்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி வருகிறது. சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் தடுப்பூசி செலுத்தவேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளதாக கூறினார்.
அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வந்தால் பத்து நாட்களுக்குள் செலுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலால் சென்னைக்கு அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம் என்று கூறிய அவர் விதிமுறைகளுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்க்காக அல்ல என்றும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் தேவையான அளவு கொரோனா தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும், தகுதி ஆனவர்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.