வடக்கு டெல்லியில் வார்டு எண் 32 என் (ரோஹினி-சி), வார்டு எண் 62 என் (ஷாலிமார் பாக் வடக்கு) மற்றும் வார்டு எண் 02-இ (திரிலோக்புரி), வார்டு எண் 08- இ (கல்யாண்புரி) மற்றும் வார்டு எண் 41-இ (சவுகான் பங்கர்) என்ற ஐந்து இடங்களுக்கான மாநகராட்சி இடைத்தேர்தல் என்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தற்போது முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
இதில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், ஒரே இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. அதுவும் வாக்கு வித்தியாசம் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் 6000த்திற்கும் மேல்தான் இருந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது டெல்லியில் பல இடங்களில் வெற்றியை கொண்டாடி வருகின்றார்கள்.
பல மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில் டெல்லியில் ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற கூடிய இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் இடைத்தேர்தல் தோல்வி என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகவும், அரசியல் நகர்வுகளில் மிகவும் கவனிக்கப்பட ஒன்றாகும் பார்க்கப்படுகின்றது.