கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்துள்ள குப்பான்வலசை கிராமத்தில் முத்துசாமி என்ற அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துசாமி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாத்தான்குளம் பகுதியில் சென்றபோது நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் முத்துசாமியை வழிமறித்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனைபார்த்த அவரது உறவினர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துசாமியை கொலை செய்த பாஸ்கரன், வாலாந்தரவை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், அர்ஜுனன், சாத்தான்குளத்தில் சேர்ந்த சதீஷ், தினேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் முத்துசாமியை கொலை செய்த தினேஷ், அர்ஜுனன், ஜெயகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் என்பவரை விடுதலை செய்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஸ்கரன் சில வருடங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததும் தலைமறைவாகி இருந்துள்ளார். எனவே காவல்துறையினர் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விசாரித்து வந்துள்ளனர். இதற்கிடையில் பாஸ்கரன் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சீனிவாசன் குற்றவாளியான பாஸ்கரனுக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.