கடைகள் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியானதால் வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர்.
சென்னையில் உள்ள அண்ணா சாலையை ஒட்டி ரிச்சி தெரு அமைந்துள்ளது. இது ரேடியோ மார்க்கெட் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு செல்போன், எலக்ட்ரானிக் மற்றும் பழுது பார்க்கும் கடைகள் போன்றவைகள் இருக்கிறது. இந்த பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள கடைகள் மூலமாக ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பெறுகின்றனர். இந்நிலையில் ரிச்சி தெருவின் அருகே அமைந்துள்ள அண்ணா சாலையில் தலைமைச் செயலகம் அமைந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதால் தொழிலாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதால் மீண்டும் தலைமைச் செயலகத்தை அண்ணாசாலைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கடைகளை இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடைகளை இடமாற்றம் செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வருவதால் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதால், தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.