Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி… மாணவிகள் சாலையில் போராட்டம்…!!

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 464 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் நீண்ட நாட்களாக எழுந்தது.

இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஜீவாவை கடந்த சில மாதங்களுக்கு முன் ஊத்துக்கோட்டை க்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் ஆணை பிறப்பித்தும் அவர் அங்கு செல்லாமல் இந்த பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இதனால் இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வந்த ஐந்து ஆசிரியர்கள் கடந்த மாதம் வேறு பள்ளிக்கு மாறி போய்விட்டனர். இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு காந்தி சிலை அருகே சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த பள்ளிப்பட்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளை  சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு செல்லும்படி காவல்துறையினர் கேட்டார்கள். ஆனால் மாணவிகள் தலைமையாசிரியை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் இல்லையெனில் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று கூறினார்கள்.

இதையடுத்து திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருள் அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் மாணவிகளிடம் குறைகளை கேட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பள்ளிக்கு திரும்பி சென்றுள்ளனர்.

Categories

Tech |