கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்னப்பள்ளி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக ராஜேந்திரன்(34) என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நாகேந்திரன் விசாரித்தபோது, ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சிலர் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த அவர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியருடன் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த பெரிய ஊசியில் மருந்தை நிரப்பி தலைமையாசிரியரை குத்த முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் பொதுமக்கள் ராஜேந்திரனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை பிடித்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.