டெல்லி வன்முறையின்போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கல்வீச்சு தாக்குதலில் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்துவிட்டார். இவர் கல்வீச்சு தாக்குதலில்தான் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் குண்டு பாய்ந்தே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் இருந்து குண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் முடிவில் அவரது இடது தோள்பட்டையில் நுழைந்த குண்டானது அவரது வலது தோள்பட்டை வரை சென்றதே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.