சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். முன்பாக அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த வருட நவம்பர் மாதம் பதவியேற்றார்.
அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முடிவு செய்தது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவின் (கொலீஜியம்) கூட்டம் கடந்த வருட டிசம்பர் 14 மற்றும் கடந்த ஐனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின் இது குறித்த பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று பொறுப்பு நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 14) கிண்டி கவர்னர் மாளிகையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஸ்டாலின் முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு கீழடி தொடர்பான மொழி பெயர்ப்பு புத்தகத்தை பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.