பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசபாளையம் பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனரான செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் மதன்(19) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடி போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மதன் தினமும் தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்குமாரிடம் மதன் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
அப்போது செந்தில் குமார் பணம் தர மறுப்பு தெரிவித்ததால் மதன் கீழே கிடந்த கல்லை தலையில் போட்டு கொலை செய்து விடுவேன் என தனது தந்தையை மிரட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதன் கையில் இருந்த கல்லை பறித்து செந்தில்குமார் தனது மகனின் தலையில் போட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த மதனை அக்கம் பக்கத்தின் அருமை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் செந்தில்குமரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.