ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினி புதிய கட்சி தொடங்குவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவா.. வருத்தப்பட வேண்டாம்… ஒருவேளை உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவரை பெறுவதற்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம்.. நீங்கள் எங்களுக்கு முக்கியம்… உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.