தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதால் புதுமண தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு செல்லூர் என்ற கிராமத்தில் 25 வயதுடைய ராமர் என்பவர் வசித்துவருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவி நதியா என்பவருடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ராமர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு சென்றார்.
தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. அந்தக் கொடூர விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமர் மற்றும் நதியா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தம்பதியினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.