மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் மருதுபாண்டி தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் பெற்றோர் ஆதரவுடன் காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தலை தீபாவளியை முன்னிட்டு பவித்ரா தனது கணவர் வீட்டிற்கு முன்பு பட்டாசுகளை வெடித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்திக் என்பவர் மண்ணெண்ணையை பவித்ராவின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை அடுத்து பவித்ராவின் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலாஜி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவான கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.