சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பழைய பல்லாவரம் பகுதியில் சுபம் நகர், சர்ச் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 23 வயதில் வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். அவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவர் அதே கல்லூரியில் படிக்கும் திரிசூலம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஸ்டெல்லா என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் பற்றி இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து, இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகும் வெங்கடேஷ் வீட்டில் இருவரும் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெல்லாவுக்கு அடிக்கடி தீராத தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் பல முறை மருத்துவம் பார்த்தும் அவருக்கு குணமாகவில்லை. அதன் காரணமாக மன உளைச்சலில் ஸ்டெல்லா இருந்து வந்துள்ளார். நேற்று காலை திடீரென அவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த ஸ்டெல்லா, தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர்.