‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை நடிகர் யோகிபாபு உறுதி செய்துள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது .
இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் நடிகர் யோகி பாபுவிடம் ‘நீங்கள் தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களா?’ என கேட்டுள்ளார். இதற்கு யோகி பாபு ‘ஆம்’ என பதிலளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய்யின் மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களில் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் தளபதியுடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.