‘தளபதி 66’ விஜயின் அரசியல் படமாக உருவாக உள்ளதாக வெளியான தகவல்களுக்கு இயக்குனர் வம்சி விளக்கம் அளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் BEAST திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குனர் செல்வராகவன் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
BEAST படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66 வது படம் உருவாக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தளபதி 66 அரசியல் படமாக உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. இந்நிலையில் இப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் இல்லை என்றும், இது தன்னுடைய முந்தைய படங்களான தோழா, மகரிஷி போல எமோஷனல் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் எனவும் வம்சி கூறியுள்ளார்.
தளபதி 66 குடும்ப பாணியில் காதல் படமாக உருவாக உள்ளதாகவும், தளபதி 66 கதையை கேட்ட விஜய் இந்த மாதிரி ஒரு ஃபேமிலி ஸ்கிரிப்ட் கேட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என கூறியதாக ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். தளபதி 66 இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.