சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவை குடித்துவிட்டு குடிமகன் ஒருவர் போதையில் தள்ளாடுகின்ற வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறு தோறும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விஐபிகள் செல்லும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே ஒரு நபர் நடக்கக்கூட முடியாத அளவிற்கு மது அருந்திவிட்டு கீழே விழுந்து கிடந்துள்ளார். அதன் பின்னர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை இயக்க முயற்சி செய்தவர் நிலைதடுமாறி பலமுறை கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் மது அருந்தி இருந்த நபர் அதிக அளவு மது போதையில் இருந்ததால் தள்ளாடிக் கொண்டே சென்று திரும்பவும் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் படுத்துக் கொண்டார். இத்தகைய காட்சியை அங்கிருந்த நபர்கள் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இத்தகைய நேரத்திலும், சட்டவிரோதமான முறையில் மீனம்பாக்கம் பகுதியில் மது விற்பனை அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மது விற்பனை செய்யும் கூட்டத்தினர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.