காடுகள், மலைகள் சூழ்ந்து இயற்கை வளம் கொண்ட பகுதியாக திகழும் தளி தொகுதி ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் குளிர்பிரதேசம் ஆகும். தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்கா அனைத்து மதத்தினரும் செல்லும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும். 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தளி தொகுதியில் காங்கிரஸ் நான்கு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, ஜனதா கட்சி, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் தலா 1 முறை வென்றுள்ளனர்.
தற்போது திமுகவின் ஒய். பிரகாஷ் எம்எல்ஏவாக உள்ளார். தளி சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,474 ஆகும். போதிய கல்வி அறிவு இல்லாததால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கும் மக்கள், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தேவை என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படித்த இளைஞர்கள் வேலை தேடி பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. விளைநிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ரோஜா மலர் சாகுபடிக்கு இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அஞ்செட்டி பகுதி தொட்டலா அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
கிராமப்புறங்களில் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். சாலைகள் சீரமைப்பு விரிவாக்கம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். வேலை வாய்ப்புகளுக்கான தொழிற்சாலைகளை உருவாக்கி தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.