சேலம் மாநகர மேயர் தேர்தலுக்கு திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் விருப்ப மனுக்கள் வாங்கும் வேலைகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளைக் கைப்பற்ற பல அரசியல் கட்சிகளும் திட்டம் போட்டு வருகின்றனர். ஆனால் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தேர்தல் தள்ளிப்போகும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தை தனது செல்வாக்கை அதிகப்படுத்த திமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சேலம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய கூட்டம் நடந்துள்ளது. அதில் சேலம் மேயர் பதவியை கைப்பற்ற திமுகவில் பல்வேறு கோஷ்டிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சேலம் மத்திய மாவட்ட செயலாளராக ராஜேந்திரன், மேற்கு மாவட்டத்தில் செல்வகணபதி, கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ எஸ் ஆர் சிவலிங்கம் செயலாளராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த மூன்று செயலாளர்களும் தங்களது ஆதரவாளர்களை முன்னிறுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் தேர்வில் சேலம் மாவட்ட திமுக அவைத்தலைவர் கலையமுதன், மாநகர துணை செயலாளர் சுபாஷ் என பட்டியல்கள் தொடர்ந்து நீண்டுகொண்டே உள்ளது. இதில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் தமிழரசன் என்பதால் அவர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக முதல்வரின் பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் சேலம் செல்வதற்கு முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.