புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உதவி கோரிய நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார்.
உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தனது சிகிச்சைக்கு உதவும் படி வேண்டுகோள் வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டார். அதனை பார்த்த திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை கொடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும் சூரி 20 ஆயிரம் ரூபாயும் அவருக்கு கொடுத்து உதவினர்.
மேலும் விஜய் சேதுபதி தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததோடு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவசியை நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.