34 லட்ச ரூபாயை முறைகேடு செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்து விற்பனையகம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு விற்பனையகத்தில் ராஜேந்திரன் என்பவரும், கூட்டுறவு மருந்தகத்தில் ராஜேஸ்வரி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தற்போது கணக்கிடப்பட்ட தணிக்கை விவரத்தில் 34,41,761 ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தஞ்சை குற்றப்புலனாய்வு காவல்நிலையத்தில் கும்பகோணம் கூட்டுறவு சங்க துணை செயலாளர் அட்சையபிரியா புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு மருந்து விற்பனையாளர் ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தானிய கடன் வசூல், மருந்து தொகை, கொள்முதல் இருப்பு தொகை ஆகியவற்றில் தவறான கணக்கை காண்பித்து 37 லட்ச ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.