கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இரண்டு மருத்துவர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
புனேயை சேர்ந்த அனில் ஜெக்தாப் என்பவர் தனது மனைவி ராஜஸ்ரீயை கடந்த 2012 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தார் அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்த ஜிதேந்திரா மற்றும் தேஷ்பாண்டே என்ற மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது இரண்டு மருத்துவர்களுடன் விஜய் என்ற மருத்துவரும் பிரசவம் பார்ப்பதற்காக உடன் இருந்துள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது ராஜஸ்ரீக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளித்தும் ராஜஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் காவல் நிலையத்தில் அனில் ஜெக்தாப் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த காவல்துறையினர் ஜிதேந்திரா மற்றும் சச்சின் தேஷ்பாண்டே ஆயுர்வேத மருத்துவம் பயின்றவர்கள் என்பதும் சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சை கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே ராஜஸ்ரி உயிரிழந்தார் என்பதை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் இரண்டு மருத்துவர்கள் மீது இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இரண்டு மருத்துவர்களும் 10 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி விக்ரம் தீர்ப்பு வழங்கினார். அதோடு இரண்டு மருத்துவர்களுடன் இருந்த டாக்டர் விஜய் மீது குற்றம் சுமத்துவதற்கான ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.