நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர்போஸ்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையரின் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் 14 முதியவர்களுக்கு வழங்கியுள்ளார். முதியவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தொடர்ந்து உங்களது பங்களிப்பை நாட்டிற்கு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தி இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து கடமையை ஆற்றியுள்ளீர்கள். இந்த நாட்டின் வாக்காளர்களாக 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உங்களது கடமையை ஆற்றியதற்கு பாராட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் சட்ட ரீதியான உதவி, நிவாரண பணி, மீட்பு, மனநல ஆலோசனை போன்றவற்றை 14567 என்ற கட்டணமில்லா முதியோர் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கூறியுள்ளார்.