மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் சக்தி-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிந்து என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாடியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சிந்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக சிந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் சிந்துவின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தபடி தற்போது நடந்து வரும் பிளஸ் 2 தேர்வு எழுதி வந்தார். இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிந்துவிற்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 19- ஆம் தேதி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிந்துவிற்கு பல் சிகிச்சை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் வருகின்ற 23- ஆம் தேதி மருத்துவர்கள் ஆலோசனை செய்த பிறகு சிந்துவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.