ரயில் இன்ஜினில் சிக்கி பலியான நபரின் உடல் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னா வரை இயக்கப்படுகிறது. நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது 50 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்றதை பார்த்த இன்ஜின் ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அந்த நபர் தண்டவாளத்தின் மையப்பகுதியை நோக்கி தவறுதலாக குதித்ததால் என்ஜின் முன்பக்க கொக்கியில் அவரது தலைப்பகுதி சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து ரயில் இன்ஜினில் அந்த நபரின் உடல் சிக்கி இருப்பதை பார்த்த இன்ஜின் ஓட்டுநர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் அந்த நபரின் உடல் இழுத்து வரப்பட்டது. இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அந்த நபரின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.