விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ஹரிஹரன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் பெத்தனாட்சி நகரில் உள்ள மெடிக்கல் குடோனில் ஹரிஹரன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வீடியோவை காண்பித்து அந்த இளம்பெண்ணை தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதோடு போகாமல் தன்னுடைய நண்பர்களுடனும் வலுக்கட்டாயமாக தனிமையில் இருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்ட அந்த இளம்பெண் ஹரிஹரன் மற்றும் அவருடைய நண்பர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஹரிஹரன் உட்பட மாடசாமி, பிரவீன் ஜூனாத் அஹமத் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், பதினொன்றாம் வகுப்பு மாணவன் என மொத்தம் எட்டு பேரை மார்ச் மாதம் 18 ஆம் தேதி கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திமுக மகளிர் அணி தலைவரும் எம்பியுமான கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியவர்களை கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்.” என அவர் பதிவிட்டுள்ளார்.