நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் வரும் காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை அனைத்து நினைவுச் சின்னங்களும் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து கொரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து மூடப்பட்ட உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால், சுற்றுலா பயணிகளுக்காக கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. தாஜ் மஹாலில் உள்ள பொருள்களை தொடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் கடுமையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று முறை அந்தப் பகுதி முழுவதும் சுத்திகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, இனி அதிகாலை 6 மணி முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று ஆக்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. தாஜ்மஹால் காலை 7மணிக்கு திறக்கப்பட்டு வந்ததால் அதன் அதிகாலை நேர அழகை ரசிக்க முடியவில்லை என புகார் எழுந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.