தாதாவை போல் நடந்து கொள்கிறது ஒன்றிய அரசு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து குறிப்பாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்துகின்ற தேச விரோத நடவடிக்கையை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த திராணி இல்லாத மோடி அரசை கண்டித்தும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 20ஆம் தேதியில் இருந்து ஒரு வார காலத்திற்கு தொடர் போராட்டங்களை நடத்திட அறிவிப்பு செய்திருக்கிறோம்.
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகளும், திமுக ஆதரவு அமைப்புகளும், இதர ஜனநாயக சக்திகளும் பங்கேற்கக் கூடிய வகையில் இந்த கருப்புக் கொடி ஏற்றுகின்ற இல்லம்தோரும் கருப்பு கொடி ஏற்றுகின்ற கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிடுகின்ற அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது.
கொரோனா நெருக்கடி இருக்கிற சூழலில் ஓரிடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களை திரட்டும் முயற்சியை கைவிட்டு, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையிலும், கொரோனா நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாக்கின்ற வகையிலும் பாதுகாப்பான முறையில் இல்லந்தோறும் கறுப்புக்கொடி என்கின்ற அடிப்படையில் மோடி அரசுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறோம்.
எமது கட்சி தலைமையகத்தில் முன்னணி தோழருடன் மோடி அரசு பதவி விலக வேண்டும், பெகாசஸ் உலகறியும் மென்பொருள் மிக மோசமான தேசவிரோத குற்றத்தை மோடி அரசு செய்திருக்கிறது. வேளாண் சட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏறத்தாழ முக்கால் வருடத்திற்கு மேலாக கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும், அது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற மோடி அரசின் போக்கை பிடிவாத போக்கை கண்டித்தும்,
அதைப்போல 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டங்களாக தொகுத்து முற்றிலும் 100 விழுக்காடு தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்ற மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒட்டுமொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இந்த தேசத்தையே விற்பனை செய்கின்ற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது.
லாபத்தில் இயங்குகின்ற எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை, காப்பீட்டு கழகங்களை, விமான நிலையங்களை, ரயில்வே துறைகளை, சேலம் ஸ்டீல் பிளான்ட் அந்த உருக்கலையை, என்.எல்.சி பங்குகளை இப்படி பொது துறைகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த தேசத்தையே விற்பனை செய்யக்கூடிய முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது. எனவே பொதுத் துறைகளை விற்காதே என்கின்ற அடிப்படையிலும் இந்த ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகளை பொருத்தவரைக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது இந்திய ஒன்றிய அரசின் மிக மோசமான மேலாதிக்கப் போக்கை, மாநில அரசுகளை சுரண்டி போக்கை வெளிப்படுத்துகிறது.
ஆகவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கூடாது அதிலும் மாநில அரசு வசூலித்து இந்திய ஒன்றிய அரசுக்கு கொடுக்கவும் அதன் பிறகு இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு திரும்ப தருவதுமான இந்த அணுகுமுறை ஒரு நாட்டாமை தனமான அணுகுமுறை. ஒரு தாதாயிசத்தை வெளிப்படுத்தக்கூடிய அணுகுமுறை. ஒட்டுமொத்தத்தில் எல்லோரையும் தண்டல் வசூல் படுத்த சொல்லி ஒரு தாதா தன்னிடத்தில் ஒப்படைக்கச் சொல்லி பிறகு தன் விருப்பம் போல அவர்களுக்கு பிரித்து தருகின்ற ஒரு போக்கு இருப்பதைப்போல இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது தண்டல் வசூலை போலிருக்கிறது. எனவே விடுதலை சிறுத்தைகளை பொருத்தவரை இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை வன்மையாக எதிர்க்கிறது என திருமாவளவன் கூறினார்.