பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து சுற்று சுவரில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இதனை ஒட்டி தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் துரித உணவகம், பேக்கரி, வங்கி, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் காலை 11 மணிக்கு அரசு பேருந்துக்கு டீசல் நிரப்புவதற்காக ஓட்டுநர் பணிமனைக்கு வாகனத்தை இயக்கி சென்றுள்ளார்.
இதனையடுத்து பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் அலுவலகத்திற்கு சென்ற போது திடீரென பேருந்து தாழ்வான பகுதியை நோக்கி தானாகவே நகர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் பணிமனையின் அருகே இருந்த தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பேருந்து நின்றுவிட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்ததோடு, தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்துவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு விரைந்து சென்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது போக்குவரத்து பணிமனை சார்பில் சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு அந்த நபர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஓட்டுநர் பேருந்தை ஆப் செய்து கியரில் நிறுத்தியுள்ளார். ஆனால் கியர் ரிலீஸ் ஆனதால் பேருந்து தானாக நகர்ந்து தடுப்பு சுவர் மீது மோதியது தெரியவந்துள்ளது.