உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 51 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 139 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் 14 வது வாக்கு பதிவு மையத்தில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
கும்பகோணம் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு நடைபெற்ற டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கட்சியினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனியான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆண், பெண் என அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர்.