திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர், நாகைக்கு 2020 ஆம் வருடம் கூரியர் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதை டெலிவரியும் செய்யாமல் விசாரிக்க வந்த ஜானகியையும் தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இதையடுத்து 5 மாதம் கழித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஜானகி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இது போன்று பல பேரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் அதை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி கணக்கில் 1 லட்ச ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும். அத்துடன் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு உள்ளான ஜானகிக்கு இழப்பீடாக 50,000 செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வழக்கு செலவு தொகையாக ரூ,5000 செலுத்தவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.