கடலூர் மாவட்டத்திற்கு மதியம் 2:20 மணிக்கு மும்பையில் இருந்து வரும் லோக மாண்ய திலக் வாராந்திர விரைவு ரயில் வந்து சேரும். நேற்று மாலை 3:40 மணிக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி புறப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று மின்சார பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின்சார எஞ்சினை மாற்றி டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு மும்பை காரைக்கால் விரைவு ரயில் டீசல் இன்ஜின் மூலம் திருப்பாதிரிப்புலியூர் வரை இயக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்சார இஞ்சினை பொருத்தி மீண்டும் ரயில் இயக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.