மின்மோட்டார் தாமிர கம்பியை திருடிச் சென்ற வாலிபரை விவசாயிகள் கட்டிப்போட்டு தாக்கிய நிலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், வி.புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய விளை நிலங்களிலிருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள் கடந்த சில மாதங்களாகவே திருடு போனது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வி. புதூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய நிலத்தில் உள்ள மின் மோட்டாரில் தாமிர கம்பிகளை 3 வாலிபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் திருடிக் கொண்டு இருந்தார்கள்.
இதை பார்த்த சி. ஏழுமலையை கண்டதும் அந்த வாலிபர்கள் தப்பித்து ஓடினார்கள். அப்போது சி.ஏழுமலை மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மூன்று பேரையும் மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் இரண்டு பேர் தப்பித்து சென்றனர். ஒருவரை மட்டும் பிடித்தனர்.அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் வளவனூர் புது காலனி பகுதியை சேர்ந்த விசாலிங்கம் மகன் ஏழுமலை(23) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து விவசாயிகள் அந்த வாலிபரின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக வளவனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரிடம் வி. ஏழுமலையை ஒப்படைத்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிய விவரத்தையும் தெரிவித்தார்கள்.
இதைத்தொடர்ந்து வி.ஏழுமலையை வளவனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரை கைது செய்து சிறையில் அடைப்பதில் காவல்துறையினர் கால தாமதம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வீ புதூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 50 -க்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் வளவனூர் காவல் நிலையத்தின் முன் திரண்டு சாலையில் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் வி. ஏழுமலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மற்றும் தப்பி ஓடிய வளவனூர் வீரன் கோவில் தெருவில் வசித்து வந்த முருகையன் மகன் முரசொலி மாறன்(23) மற்றும் வளவனூர் புது காலனியில் வசித்து வரும் முருகன் மகன் கோகுல்(19) ஆகிய 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மேலும் இவர்கள் திருடிய தாமிரக் கம்பிகளை எந்த கடையில் விற்று வருகிறார்களோ? அந்த இரும்பு கடையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்த சாலை மறியல் காரணமாக விழுப்புரம் – புதுச்சேரி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஏழுமலையை சிறையில் அடைப்போம் மற்றும் தப்பித்துச் சென்ற இரண்டு பேரையும் விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் உறுதி கொடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் நேற்று முன்தினம் காலை 9.45 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். அதன்பின் போக்குவரத்து பாதிப்பு சரிசெய்யப்பட்டது. இதற்கிடையில் வி. ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து வளவனூரில் மறைந்திருந்த முரசொலி மாறனினையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கோகுலை மட்டும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.