தாயார் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே பருத்திமூட்டுவிளை பகுதியில் மிக்கேல் தாசன் – மேரி சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெமிஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெமிஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மேரி சரோஜினி பெமிஷை கண்டித்துள்ளார். அதன்பிறகு பெமிஷின் குடும்பத்தினர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அப்போது பெமிஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் வழிபாடு முடிந்து ஆலயத்திலிருந்து பெமிஷின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாகியும் பெமிஷின் அறை பூட்டிக் கிடந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் பெமிஷ் கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் சென்றுள்ளனர். அப்போது பெமிஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெமிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.