திருச்சியில் மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி ஹேமாபாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்துவிட்ட நிலையில் மல்லிகா தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மூத்த மகள் ஹேமாபாரதியை கணவர் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள ஹேமாபாரதியை வளைகாப்பு நடத்த தாயாரிடம் பணம், நகை வாங்கி வருமாறு கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த ஹேமாபாரதி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தனது மகள்களுடன் மல்லிகா மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினார்.