விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டதால் தாய் ஆடு பரிதாபமாக இறந்தது. இதனால் குடிக்க பாலின்றி தவித்த 3 ஆட்டுக்குட்டிகளையும் சக்திவேல் திருமலைபுரத்தில் வசிக்கும் பதினெட்டு என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார்.
அவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆனால் அந்த 3 குட்டிகளுக்கும் பிற ஆடுகள் பால் கொடுக்க மறுத்தன. இந்நிலையில் வீட்டில் வளர்க்கும் நாய் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கிறது. மேலும் ஆட்டுக்குட்டிகளை தனது குட்டிகள் போல எங்கு சென்றாலும் அழைத்து சென்று நாய் பராமரித்து வளர்த்து வருகிறது. இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.