மாணவனின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ராஜேந்திரன்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய 2-வது மகன் பால மணிகண்டன் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு படிப்பின் மீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் எப்போதுமே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மாணவனுடன் படிக்கும் அருள் மேரி என்ற மாணவிக்கு பால மணிகண்டன் மீது மிகுந்த பொறாமை இருந்துள்ளது. இதன் காரணமாக அருள்மேரி, பால மணிகண்டனிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
இதனால் அருள் மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா மாணவனுக்கு விஷம் கலந்த கூல்ட்ரிங்ஸை குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு சகாயராணி விக்டோரியாவை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மாணவன் சாகும் தருவாயில் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது மாணவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்கப்பட்டதற்கு பால மணிகண்டன் என்று கூறியுள்ளார்.
உனக்கு யாரு கூல்டிரிங்ஸ் கொடுத்தாங்க? அருள் மேரி அம்மா எங்க அம்மா கொடுக்க சொன்னதாக கூறி வாட்ச்மேனிடம் கொடுத்தாங்க. அந்த கூல்டிரிங்ஸ் குடிச்ச பிறகு என்னாச்சு? ஒன்னும் செய்யல. அப்புறம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்துல, எனக்கு ஒரு மாதிரி வந்துட்டு அதனால நான் படுத்துட்டேன். அதுக்கப்புறம் வாமிட் வர மாதிரி இருந்துச்சு. என்ன ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்தாங்க. உன் கூட படிச்சா அந்த பொண்ணு பேரு என்ன. அந்த பொண்ணு பேரு அருள் மேரி. அந்த பொண்ணு உன்னை என்ன செய்யும். நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுப்பேன். அதனால என்கிட்ட எப்ப பாத்தாலும் சண்டை போடும். ஆனா அவங்க அம்மா என்கிட்ட பேசினதே இல்ல.
அந்த பொண்ணு கூப்பிட்டு ஏதாவது ஸ்கூல்ல கேட்டாங்களா. எனக்கு தெரியல. எனக்கு நடந்த மாதிரி யாருக்குமே இனி நடக்கக்கூடாது. அவங்க மேல நடவடிக்கை எடுங்க என்று சாகும் தருவாயில் தாயின் அருகே படுத்து கொண்டு மாணவன் கூறிய அந்த வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. மாணவனின் உடல் ஜிப்மர் மருத்துவமனை குழுவின் முன்பாக பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மேலும் தன் மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவனை விஷம் கொடுத்துக்கொன்ற சம்பவம் மனசாட்சியே இல்லை என்பதற்கு மிகப்பெரிய சாட்சி.