பெரியபாளையம் அருகே தாயின் கவனக்குறைவினால் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பது வழக்கம். வழக்கம் போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு சமையலறைக்குள் கேஸ் அடுப்பை ஆஃப் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நித்தியஸ்ரீ வெந்நீரில் தவறி விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறி துடித்து ஓடி வந்த தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக குப்பம்மாள் குழந்தை நித்யஸ்ரீயை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி நித்யஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.