சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் பாலு-காளியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது தாயுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையை கடக்க முயன்ற போது அறந்தாங்கி நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி சிறுமியின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த காயத்ரி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரான தங்கராசு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.