தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி நிலங்கள் கையகப்படுத்தும் படி கோவில் உதவி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலத்தின் மதிப்பு ஐந்து கோடியாகும். இது போலவே துவாக்குடியில் இரண்டு இடங்களில் 3 ஏக்கர் 28 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பானது இரண்டு கோடியாகும். தற்பொழுது தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு இருக்கின்றது.