மகன் தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரப்பாடி பகுதியில் கூலி தொழிலாளியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரக்கு வாகன ஓட்டுனரான கார்த்திக்(24) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கார்த்திக் தனது தந்தையை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திக் தனது தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவலிங்கத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.