காரட்டில் பீட்டா கரோட்டின் என்ற பொருள் உள்ளது. இது நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும். பிரசவித்த பெண்கள் காரட் அதிகமாகச் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். பேறுகாலத்தின்போது கூடிய உடல் எடையைக் குறைக்கும் இயல்பும் காரட்டுக்கு உள்ளது. பெருஞ்சீரகம் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊற வைக்கவேண்டும். காலையில் அந்த நீரைப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். தினமும் காலையில் இதுபோன்ற நீரை அருந்தி தாய்மார் பயன் பெறலாம்.
வெந்தயம் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வெந்தயத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. வெந்தயத்திற்குக் குழந்தையின் மூளையை வளரச் செய்யும் இயல்பு உள்ளது. தாய்ப்பால் சுரப்போடு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுவதால் வெந்தயத்தைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெந்தயத்தை முளைக்கட்டியும் மென்று சாப்பிடலாம்.
வெள்ளைப்பூண்டுக்குத் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும் தன்மை உள்ளது. தினமும் பூண்டு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். வெள்ளைப்பூண்டைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.
தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத தாய்மார் இலவங்கபட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இலவங்கபட்டை பொடியைத் தேநீரிலும் சேர்த்துப் பருகி பயன் பெறலாம். பாலூட்டும் தாய்மார் பப்பாளி பழத்தைச் சாப்பிட்டால் பால் பெருகும். தாய்ப்பால் சுரப்பை அதிக அளவில் தூண்டக்கூடிய பழம் பப்பாளியாகும்.