Categories
தேசிய செய்திகள்

தாய்ப்பால் கொடுக்கலாம்… “கொரோனா பரவாது”… ஜிப்மர் மருத்துவமனை விளக்கம்..!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா தொற்று பரவாது என ஜிப்மர் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பச்சிளம் குழந்தைகள் நலத்துறை சார்பில் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்பாலில் சரியான அளவிலும் விகிதத்திலும் நிறைந்திருப்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு மாட்டு பால், பால் பவுடர், கிரைப்வாட்டர் போன்றவற்றை கொடுக்கக் கூடாது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் பாசப்பிணைப்பு நன்றாக இருக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. மேலும் கொரோனா காலத்திலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது. மாறாக அந்த தொற்று எதிர்ப்புசக்தி அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும். கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும் சேயையும் பிரிக்கவேண்டிய அவசியமில்லை” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை அமுதம் தாய்ப்பால் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தது போக எஞ்சிய தாய்ப்பாலை, வங்கிக்கு தானம் செய்யும் அன்னைக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மாறாக அவர்களுக்கு பால் சுரப்பது அதிகரிக்கும். தாய்ப்பால் வங்கியில் தாய்மார்கள் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்படும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் நன்கு பரிசோதித்த பிறகே மற்ற குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். இதன்மூலம், தாயை இழந்த குழந்தைகள் அல்லது தாயிடமிருந்து தற்காலிகமாக பால் கிடைக்காத குழந்தைகளும் பயனடைவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |