தெலுங்கானா மாநிலம் ராஜா போர் தாலுகா திருமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜெயஸ்ரீ (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால் அவரின் கணவர் பிரசாந்த் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.