மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார் செட்டிகுளத்தில் கேசவன்-வனஜா தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மஞ்சு, அக்ஷரா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனஜா கேசவனை பிரிந்து ஜோஸ் கான்பியர் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இருப்பினும் வனஜாவின் குழந்தைகளை தன்னுடைய பிள்ளைகள் போல் நினைத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜான் ஜோஸ் திடீரென வனஜாவை கொடூரமான முறையில் கொலை செய்து கட்டிலின் அடியில் பிணத்தை மறைத்து வைத்துள்ளார். அதன்பிறகு குழந்தைகள் 2 பேரையும் கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து ஜான் ஜோஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த 2 நாட்களாக குழந்தைகள் 2 பேரும் அழுகிய சடலங்களோடு தவித்து வந்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து வெளியே வந்த மஞ்சு இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அதன்பிறகு ஜான் ஜோஸ் மற்றும் வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் குழந்தைகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் வனஜாவின் நடத்தை மீது ஜான் ஜோஸ் சந்தேகமடைந்து அவரை கொடூரமான முறையில் கொன்றது தெரியவந்தது.