தாய் மற்றும் மகளுடன் காண்டூர் கால்வாயில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்த இருக்கும் வீ.வேலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி நாகரத்தினம். இத்தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் இருக்கிறாள். கோகிலாவின் கணவர் பாலகுருசாமி. இவர்களுக்கு தட்சயா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் கோகிலா தனது குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு குணமாகாததால் அவரின் கணவர் அவரை விட்டு சென்று விட்டார். இதையடுத்து கோகிலா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மனநலம் பாதிப்பு, கணவர் பிரிந்து சென்ற சோகம் ஆகிய காரணத்தால் மன அழுத்தத்தில் கோகிலா மற்றும் அவரின் தாய் இருந்துள்ளார்கள். இதனால் இவர்கள் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்து இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தட்சயாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
இதனால் சிகிச்சை அளிப்பதற்காக கோகிலா மற்றும் அவரின் தாய் உடுமலையில் இருக்கும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். அதன்பின் பஸ்ஸில் ஏறி திருமூர்த்தி அணைக்கு சென்றிருக்கின்றார்கள். அப்போது கோகிலா தனது குழந்தையை இடுப்பில் சேலையை வைத்து கட்டிக் கொண்டு காண்டூர் கால்வாயில் குதித்திருக்கிறார். பின் கோகிலாவின் தாயும் குதித்துள்ளார்.
இதை பார்த்த அங்குள்ளசுற்றுலா பயணிகள் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்கள். விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரையும் பிணமாக மீட்டார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடலையும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.